கர்மா

கர்மா என்ற வார்த்தை பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்படும் ஒன்றாக உள்ளது! கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும் தீய செயல்களை செய்தால் துன்பம் தரும் பாவமும் புண்ணியமும் ஒன்றை ஒன்று நீக்கிவிடாது நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக அதர்மமான செயலில் ஈடுபட்டால் அது சரியாகிவிடாது. செய்த தவறுக்கு தண்டனையும் அடுத்தவர்களுக்கு செய்த உதவிக்கு உண்டான நற்பலனும் தனித்தனியே நம்மை வந்து சேரும்.
நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பாவ புண்ணியங்கள் கலந்தே இருக்கும். பாவ காரியங்கள் மட்டுமே செய்து நல்ல செயல்கள் எதுவும் செய்யாத மனிதனோ அல்லது பாவத்தை முழுதாக தவிர்த்து புண்ணியகாரியங்கள் மட்டுமே செய்யும் மனிதனோ உலகில் கிடையாது எனவே ஒரு அயோக்கியன் சுகமாக இருக்கிறானே என்று கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. அவன் சுகமாக இருப்பதற்கு காரணம் அவன் செய்த புண்ணியம் அவன் செய்யும் கெட்ட காரியங்களுக்கு நிச்சயம் அவன் தண்டனை அனுபவிப்பான். அதே போல் நான் எப்பொழுதும் எல்லோருக்கும் நன்மை மட்டும் தான் செய்கிறேன், கடவுள் ஏன் என்னை இப்படி தண்டிக்கிறார் என்ற கேள்வியும் தவறு. பாவ புண்ணியங்களின் பலனை தனித்தனியாக அவரவருக்கு சேரவைப்பதில் இறைவன் எந்த தவறும் செய்வதில்லை அது போல நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் வினைகளும், முன்னாடி அனுபவித்த நல்வினை, புதியதை அனுபவிக்க அனுபவிக்க பழையவை தீர்ந்து விடுகின்றன. புதியவை செய்ய அது சேரும். ஆகவே பழையவினை அனுபவிப்பதால் அது அழிந்துவிடும் ஆகவே சுக, துக்கங்களை அனுபவிக்கிறோம் என்றால் பழைய வினைகள் அழிந்து கொண்டு வருகின்றன என்று அர்த்தம்.

உலகத்தில் எந்த மதத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இந்து மதத்திற்கு உண்டு என்றால் அது மறுபிறப்பு கொள்கை என்று உறுதியாக கூறலாம். இஸ்லாம் மார்கத்தின் படி மனிதன் இறுதி தீர்ப்பு வரும் வரை கல்லறைக்குள் காத்திருக்கிறான். கிறிஸ்தவ மதத்தின்படி இயேசுவின் இரண்டாவது வருகைக்காக ஒவ்வொரு ஜீவனும் கல்லறை தோட்டத்தில் உறங்க வேண்டும். நாம் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ற தீர்ப்பை இறைவன் வரும் போது தருவான். தவறு செய்தால் தண்டனை உறுதி. அதிலிருந்து தப்ப இயலாது. முடிவே இல்லாத நரக பள்ளத்தில் தவறு செய்த ஆத்மாக்கள் தள்ளப்படும். கடவுள் எக்காரணத்தை முன்னிட்டும், தவறு செய்தவர்களை நரகத்தில் தள்ளாமல் விடமாட்டார் என்பது அந்த மதங்களின் அசைக்க முடியாத கொள்கைகளாகும்.

ஆனால், இந்து மதம் அவைகளுக்கு முற்றிலும் முரணான ஒரு பாதையை காட்டுகிறது என்றால் அது மறுபிறப்பு என்ற பாதையாகும். தவறு செய்தவன் அவன் தவறுக்கு ஏற்ற பிறப்பை எடுத்து, அதை அனுபவிக்க வேண்டும். அனுபவித்த பிறகு அவனுக்கு நற்கதி கிடைக்கும். முடிவே இல்லாத நரக வாழ்க்கை என்பது எந்த ஜீவனுக்கும் கிடையாது. தனது தவறுக்கு தண்டனை அனுபவித்த பிறகு, அவன் இறைவனின் அருள் நிழலை நிச்சயமாக அடையலாம் என்று இந்து மதம் கூறுகிறது. அப்படி மறுபிறப்பை கூறுவதனால், மறுபிறப்புக்கு ஆதாரமாக கர்ம கொள்கை என்பது இருப்பதனால் கர்மா பற்றிய சித்தாந்தம் இந்து மதத்தை பொறுத்தவரை மிக முக்கியமான தத்துவமாகும்.

இயற்கை நியதிக்கு கட்டுப்பட்டு அது போகிற வழியிலேயே மனிதன் தனது வாழ்க்கை பயணத்தை செலுத்துவான் என்றால் அவன் நன்மை செய்தவனாக இருக்கிறான். அதற்கு எதிரான பாதையில் முரண்டுபிடித்து கொண்டு செல்கின்ற போது தீமை செய்தவனாக மாறுகிறான். உதாரணமாக சொல்லுவது என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பது இயற்கை வகுத்த விதி. அந்த விதியை மாற்ற முனைகிறபோது ஒழுக்கம் கெடுகிறது. அமைதி தடுமாறுகிறது. அழிவும் வந்துவிடுகிறது. எனவே இயற்கைக்கு எதிரான செய்கையால் ஏற்படுவதே தீமை.

எனவே இன்று இப்போது செய்கின்ற செயலானது பிற்காலத்தில் குறிப்பிட்ட குணமாக மாறுவதோடு அல்லாமல் செயலாகவும் வடிவெடுத்து சரியான பின்விளைவுகளை தருகிறது. இதனால் தான் தமிழ்நாட்டு சான்றோர்கள் வினை விதைத்தால் வினை அறுக்கலாம். திணை விதைத்தால் திணை அறுக்கலாம் என்கிறார்கள் சகல துறையிலும் நல்ல ஞானம் பெற்ற வள்ளுவன் கூட பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்.

இப்போது நமக்கு ஒருவினோதமான சந்தேகம் வருகிறது. நல்லது செய்தால் நல்லது விளையும் என்றால் ராமகிருஷ்ண பரமஹம்சரும், ரமணமகரிஷியும் மிக கொடுமையான புற்றுநோயால் அவதிபட்டார்களே அது ஏன்? வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை திருப்பி காட்டு என்று கருணைமொழி பேசிய ஏசுநாதர் மிக கொடுமையாக சிலுவையில் அறையப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு உயிர் நீத்தாரே அது ஏன்? அறியாமை இருளில் மூழ்கி கிடந்த கிரேக்க மக்களை விழிப்படைய செய்த சாக்ரட்டிஸ் விஷம் கொடுத்து சாகடிக்க பட்டாரே அது ஏன்? என்பது தான் அந்த கேள்விகள் இது நியாமில்லாத கேள்விகள் என்று யாரும் கூற முடியாது.

இதற்கு தக்க பதிலை இந்து தர்ம சாஸ்திரங்கள் தருகிறது. இன்று ஞானியாக வணங்கத்தக்க புருஷர்களாக பிறந்திருப்பவர்கள் கடந்த காலத்தில் அப்படி இருந்தார்கள் என்று கூறுவதற்கு இயலாது. அப்போதைய அவர்களது கர்மாவிற்கு ஞான வாழ்க்கையை பெற்றாலும் தலைகொடுத்து தான் ஆகவேண்டும் என்ற நியதி இருக்கிறது. ஆனால், அதே நேரம் கர்ம வினைக்கு ஞான சீலர்களே தலை வணங்க வேண்டும் எனும் போது சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம் என்ற வைராக்கியத்தை மற்றவர்கள் பெறுவதற்காகவும், இறைவன் ஞானிகளுக்கு துயரத்தை தருகிறான் என்று நமது மதம் தெளிவாக சொல்கிறது.

எனவே இன்பத்தோடு வாழ நினைப்பவர்கள் தங்களது சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்கு இன்பத்தை கொடுங்கள். அப்படி செய்தால் நீங்கள் நடந்து செல்லும் பாதை முழுவதும் மலர்களால் அலங்கரிக்க பட்டதை காண்பீர்கள். மாறாக மாற்றான் தலையில் நெருப்பை வாரி கொட்டினால் நீங்கள் அக்னி வளையத்திற்குள் நடந்து செல்ல வேண்டிய துயரம் ஏற்படும். இது தான் இந்து மதம் கர்மத்தை பற்றி சொல்வதன் எளிமையான தாத்பர்யம் இதை உணர்ந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது.

சுருக்கமாக சொல்வதென்றால் நாம் செய்யும் நல்லது கெட்டது இவை இரண்டும் கலந்ததுதான் கர்மா சரி இந்த ஜென்மத்துல கர்மாவை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது உங்களோட சந்தோசத்திற்காக உங்க பெத்தவங்களை கொடுமை படுத்தாதீர்கள் அவர்கலை சந்தோசமாக பார்த்து கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் சங்கடப்படாமல் நீங்கள் நடந்து கொள்ளுங்கள் அடுத்தவனுக்கு கெடுதல் நினைக்காம வாழ பழகணும் முடிந்தவரை சாப்பாடு இல்லாதவர்களுக்கு வாங்கி கொடுங்கள் ஒருவரின் பசி பிணியை போக்குவதே பெரிய கொடை கெட்டவனாக வாழ வேண்டாம் நல்லவனாக கூட வாழ வேண்டாம் குறைந்த பட்சம் மனிதனாக வாழ்ந்தால் துயரம் பறந்து ஓடும்.